Sat. Apr 20th, 2024

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மதுரையில் மாநகராட்சி கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது நச்சுக்காற்று ம தாக்கி 3 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும் , துயரமும் அடைந்தேன் . உயிரிழந்த மூவரில் மதுரை மாடக்குளம் பகுதி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அன்புத்தம்பி சரவணனும் ஒருவர் என்ற செய்தி துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது .

கழிவு நீர்த்தொட்டிகளைச் சுத்தம்செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன் . இருந்தும் அதுகுறித்து ஆளும் அரசுகள் எவ்வித அக்கறையும் செலுத்தாது , அலட்சியம் செய்ததன் விளைவே தற்போது மேலும் மூன்று உயிர்கள் பறிபோக முக்கியக் காரணமாகும் . ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கவும் , பணம் எடுக்கவும் , குளிர்பானங்களைப் பெறவும் இயந்திரங்கள் வந்துவிட்ட எனது நாட்டில் மனிதக் கழிவுகளை அள்ளவும் , பாதாளச் சாக்கடையைத் தூய்மைப்படுத்தவும் , மனிதர்கள் இறங்கி தங்கள் கைகளால் செய்ய வேண்டி இருப்பதென்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும் . மனிதர் கழிவுகளை மனிதரே அள்ளி மரணிக்கச் செய்துவிட்டு ; சந்திரனுக்கும் , செவ்வாய்க் கிரகத்திற்கும் விண்வெளி ஓடங்களை அனுப்புவதையும் , கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகள் தயாரிப்பதையும் வளர்ச்சி என்று வாய்கூசாமல் பேசுவதை எவ்வாறு ஏற்க முடியும் ?

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தைத் தடுக்கக் கடந்த 1994 ஆம் ஆண்டு ‘ தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையம் உருவாக்கப்பட்டதுடன் , கடந்த 2013 ஆம் ஆண்டு மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ளுவதற்குத் தடை விதித்துச் சட்டத் திருத்தமும் கொண்டுவரப்பட்டது . இருந்த போதிலும் இன்றுவரை தமிழ்நாட்டில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பொருளாதாரத் தேவைக்காக இப்பணிகளில் ஈடுபடுகின்றனர் என்பது மிகுந்த வேதனைக்குரிய உண்மையாகும் .

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் 50 முதல் 100 பேர் வரையிலும் , தமிழ்நாட்டில் 5 முதல் 10 பேர் வரையிலும் கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியின்போதே உயிரிழந்து வருகின்றனர் . ஒவ்வொருமுறையும் கழிவு நீர்த்தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி உயிரிழப்பதும் , அரசு நிதியுதவி அளிப்பதோடு கடந்து செல்வதும் தொடர்கதையாகிவிட்டது . ஆகவே , தமிழ்நாடு அரசு இதற்கு மேலாவது விழிப்படைந்து , மனிதக் கழிவுகளை அகற்றவும் , பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்யவும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதைத் தீவிரமாகக் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டுமெனவும் , சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோருக்குச் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட நவீன உடைகள் உட்பட அனைத்துப் பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்பட வேண்டுமெனவும் , மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ள பணியமர்த்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் .

மேலும் , தற்போது மதுரை மாநகராட்சி கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியின்போது உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கும் தலா 1 கோடி ரூபாயை துயர் துடைப்பு உதவியாக வழங்க வேண்டுமெனவும் , அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் . “

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *