மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் முதல்வருக்கு மனு ஓன்று . அந்த மனுவில் கூறியதாவது “மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவும் ஆட்சிப்பேரவையும் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துவரும் தொகுப்பூதியப் பணியாளர்கள் ( CPCLR ) மற்றும் தற்காலிக பணியாளர்கள் ( CLR ) மொத்தம் 136 பணியாளர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி பல்கலைக்கழக தற்போதைய நிதி நெருக்கடியை மட்டும் கணக்கில்கொண்டு 08.04.2022 அன்று திடீரென அந்தந்த பிரிவு துணைப்பதிவாளர் , இயக்குனர் , கண்காணிப்பாளர் , ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் வாய்மொழி மூலம் தகவல் தந்து வேலையைவிட்டு வீதிக்கு அனுப்பிவிட்டது . எங்களோடு எங்களை நம்பிவாழும் குடும்ப உறுப்பினர்களும் நிர்கதியாய் தள்ளாடும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர் . எங்கள் வயதான பெற்றோர்களும் கல்விபயிலும் குழந்தைகளும் நெருக்கடியான நிலையை எதிர்நோக்கி மனரீதியாகப் பாதிக்கப்படும் கொடூரமான . இருளான எதிர்காலத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டோமே என்ற நியாயமான ஐயம் எங்களின் மனதையும் கசக்கிப்பிழிகிறது . எல்லாத்துறைகளிலும் பிரிவுகளிலும் போதுமான வேலைப்பளு இருந்தும் நிதிநெருக்கடியை மட்டும் காரணம் காட்டி இந்தப்பல்கலைக்கழகத்தை மட்டுமே எங்கள் வாழ்வின் அடையாளமாகப் பாவித்து நேர்மையாகவும் கடுமையாகவும் சொற்ப ஊதியம் பெற்றும் உழைத்துவருகிற எங்களையும் எங்களை நம்பியுள்ள குடும்ப வாழ்க்கையையும் பாதுகாக்கும் முகமாக எங்களை மீண்டும் பணியில் சேர்த்திட பல்கலைக்கழக மாண்புமிகு துணைவேந்தருக்கும் மதிப்புமிகு பதிவாளருக்கும் ஆணையிடுமாறு மக்களின் முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம் . வேலைநீக்கம் செய்யப்பட்ட எங்களில் முப்பது சதவீதம் திருமணமான பெண்கள் , மாற்றுத்திறனாளிகள் , துப்புரவு தொழிலாளர்கள் முதல் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் வரை இவர்களின் குடும்ப வாழ்வும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறோம் . எனவே எங்களின் வாழ்வாதாரம் மற்றும் குடும்பசூழ்நிலையை கருத்தில்கொண்டு எங்களை மீண்டும் பணியில்சேர உதவிட வேண்டுமாய் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் .”
Hits: 7