Fri. Apr 19th, 2024

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் ( எஸ்சி / எஸ்டி ) ஆணைகள் ( இரண்டாவது திருத்தம் ) மசோதா மீதான விவாதத்தில் விசிக நிறுவனர் – தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று ஆற்றிய உரை :

மாண்புமிகு அவைத் தலைவருக்கு வணக்கம் ! இந்த மசோதா மீது உரையாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கியமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

எஸ்சி / எஸ்டி சமூகப் பிரிவினர் மதமில்லா , சாதியில்லா மண்ணின் மைந்தர்கள் . இவர்களுக்கு மதமும் இல்லை , சாதியும் இல்லை . ஆனால் இந்துப் பெரும்பான்மை என்று காட்டிக் கொள்வதற்காக எஸ்சி / எஸ்டி மக்களை இந்துக்கள் என சான்றிதழ் வழங்கி வருகிறோம் . இந்துக்கள் பட்டியலில் இணைத்துக் கொண்டு இருக்கிறோம் . இது அந்த மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகமாகும் . பெரும்பான்மை எனக் காட்டிக் கொள்வதற்காக அவர்களை இந்துக்களாக இணைத்துக் கொண்டிருக்கின்ற நாம் அல்லது நமது அரசு , அவர்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கு , கல்வி- வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மேம்படுத்துவதற்கு , அவர்களுக்கு காலங்காலமாக இழைக்கப்பட்டு வருகிற இழிவுகளில் இருந்தும் , வன்கொடுமைகளில் இருந்தும் பாதுகாப்பதற்கு துளி அளவும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்பதைதான் இந்த 75 ஆண்டுகால சுதந்திர இந்தியா நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது .

எனவே , முதலில் எஸ்சி / எஸ்டி மக்களை இந்துக்கள் அல்லாதவர்கள் என்று பிரகடனப்படுத்த வேண்டும் . புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் விரும்பியபடி , பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள் விரும்பியபடி இவர்கள் இந்துக்கள் இல்லை என்பதை பிரகடனப்படுத்த வேண்டும் என்று நான் அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்க கடமைப்பட்டிருக்கிறேன் . அல்லது இவர்கள் அனைவரையும் பூர்வ பௌத்தர்கள் என்று அறிவிப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் . இந்தியா முழுவதும் உள்ள 25 விழுக்காட்டிற்கு மேலான எஸ்சி / எஸ்டி சமூகப் பிரிவினரை பூர்வ பௌத்தர்கள் என்று அறிவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் .

பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர்கள் சாதிச் சான்றிதழ் பெறுவதில் மிகப்பெரிய நெருக்கடிகளை சந்திக்கிறார்கள் . தமிழ்நாட்டில் இருளர் சமூகத்தினர் உள்ளனர் , குருமன்ஸ் , குரும்பர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள் . இன்னும் இது போன்ற பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர்கள் கல்வி பெறுவதற்கு , வேலைவாய்ப்பை பெறுவதற்கு , சாதிச் சான்றிதழ் பெற முடியாத நிலை இருக்கிறது . உச்சநீதிமன்றம் சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது . ஆனால் , அதை பின்பற்றாமல் சாதி சான்றிதழ் வழங்குவதில் மிகப்பெரிய இக்கட்டை பழங்குடி மக்கள் சந்திக்க நேர்கிறது . இதனால் கல்வியைப் பெற முடியவில்லை , வேலைவாய்ப்பைப் பெற முடியவில்லை , மனைப்பட்டா பெறுவதற்கு கூட முடியாத நிலையில் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் .

காலம்காலமாக தலைமுறை தலைமுறையாக நீர்நிலை ஓரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற பழங்குடி மக்களை “ நீங்கள் நீர்நிலை இடத்தில் நீர்பிடிப்பு பகுதியில் இருக்கிறீர்கள் எனவே பட்டா தர முடியாது ” என்ற ஒரு காரணத்தை காட்டுகிறார்கள் . ஆகவே , உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் , பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கக்கூடிய வகையில் அவர்களுக்கு சாதி சான்றிதழ் இலகுவாக வழங்கக்கூடிய வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் .

Visits: 13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *