Sat. Sep 24th, 2022

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை “கட்டுமானப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து விஷம் போல் ஏறிக்கொண்டே செல்வதன் காரணமாக ஏழை , எளிய , நடுத்தர மக்களின் வீடு வாங்கும் நோக்கம் சிதைந்து போயுள்ளதையும் , அந்தத் துறையே முடங்கும் நிலைக்கு வந்துள்ளதையும் பார்க்கும்போது ” வீட்டைக் கட்டிப் பார் , கல்யாணம் பண்ணிப் பார் ” என்ற பழமொழிதான் அனைவர் நினைவிற்கும் வருகிறது .

கடந்த பத்து மாத காலமாக வீடு கட்டுவதற்குத் தேவையான இரும்பு கம்பி , சிமெண்ட் , செங்கல் , எம்.சாண்ட் , மரம் , பீங்கான் பொருட்கள் , பிளாஸ்டிக் பொருட்கள் என அனைத்துப் பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கின்றன . கடந்த நான்கு மாதங்களாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து இருக்கிறது . கடந்த ஆண்டு 70,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு டன் ஸ்டீல் விலை தற்போது ஒரு இலட்சம் ரூபாய்க்கும் , 365 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை சிமெண்ட் 450 ரூபாய்க்கும் , 9 ரூபாய் 60 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட செங்கல் 11 ரூபாய் 50 காசுக்கும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது நாளிதழில் செய்திகள் வந்துள்ளன .

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உள்ள விலையோடு ஒப்பிடுகையில் , மரத்தின் விலை மட்டும் 35 விழுக்காடு உயர்ந்திருப்பதாகவும் , குழாய்களின் விலை 20 விழுக்காடு உயர்ந்து இருப்பதாகவும் , மின் சாதனங்களின் விலை 10 விழுக்காடு உயர்ந்து இருப்பதாகவும் , சிக்கனமான பட்ஜெட்டில் வீடு கட்டுபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் , வழக்கத்திற்கு மாறான இந்த விலை உயர்வு கட்டுமானத் தொழிலையே முடக்கிப் போட்டுள்ளதாகவும் , வீடு கட்டுவதற்கான செலவு கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 25 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும் , இரும்பு விலை உயர்விற்கு உக்ரைன் போர் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும் , மற்ற பொருட்களின் விலை உயர்ந்து இருப்பது ஆச்சரியம் அளிப்பதாகவும் , இதன் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பின் விலையும் 10 விழுக்காடு உயர்ந்து இருக்கிறது என்றும் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர் .

இது மட்டுமல்லாமல் , சென்ற ஆண்டு சென்னைப் பெருநகரர வளர்ச்சிக் குழுமம் உள்கட்டமைப்பு வளர்ச்சிக் கட்டணத்தை 20 விழுக்காடு உயர்த்தியுள்ளது வீடு கட்டுவோர் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது . அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் நிறுவனங்கள் இதனை வீடு வாங்குவோர் தலையில் சுமத்துவார்கள் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது . மொத்தத்தில் பாதிக்கப்படுவர்கள் ஏழை , எளிய , நடுத்தர மக்கள்தான் .

ஏழை மக்களின் வீடு கட்டும் கனவு நிறைவேற வேண்டுமென்றால் , கட்டுமானப் பொருட்களின் விலை கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் . அதனைச் செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு . வாணிபம் என்ற பெயரில் கொள்ளை இலாபம் ஈட்டுவோரையும் , பொருட்களை பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுத்துவோரையும் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும் , ஏற்றுமதி , இறக்குமதிக்கொள்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டுமென்றால் அதனை மத்திய அரசிடம் சுட்டிக்காட்டி அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு . இதனைத் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் . .

எனவே , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு , கட்டுமானப் பொருட்களின் விலையினை கட்டுக்குள் கொண்டு வந்து , ஏழையெளிய மக்களின் வீடு கட்டும் செலவினைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் .”

Hits: 12

Leave a Reply

Your email address will not be published.