Tue. Sep 27th, 2022

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு . ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை “மக்களைப் பார்த்து ஆளுகிறவர்கள் அஞ்ச வேண்டும் . ஆளுவோரைப் பார்த்து மக்கள் அஞ்சக்கூடாது . அதுதான் உண்மையான ஜனநாயகம் . ” என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள் . பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிக்கு முற்றிலும் முரணான வகையில் , ஆளுகிறவர்களைப் பார்த்து மக்கள் மட்டும் அல்ல , அரசு அதிகாரிகளே அஞ்சக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமை தற்போது தமிழ்நாட்டில் நிலவுகிறது .

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடன் நான் வெளியிட்ட அறிக்கையில் , ஆளும் கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருக்கிறது என்றும் , தேர்தல் நூறு விழுக்காடு சுதந்திரமாகவும் , நேர்மையாகவும் , நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்கும் என்றும் , நடந்து முடிந்த தேர்தல் முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல என்றும் குறிப்பிட்டு இருந்தேன் . என்னுடைய கூற்று தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின்மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது . ‘ ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் ‘ என்பதற்கேற்ப ஒரு தேர்தல் தில்லுமுல்லு சம்பவம் நடைபெற்று , அது சென்னை உயர் நீதிமன்றத்தின்மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது .

மதுரை மாவட்டம் , டி . கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் பத்தாவது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட பழனிசெல்வி என்பவரும் , தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி என்பவரும் தலா 284 வாக்குகள் பெற்ற நிலையில் , குலுக்கல் முறையில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டவர் வெற்றி பெற்றதாக இணையதளத்தில் வெளியிடப்பட்டு , பின்னர் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக மாற்றப்பட்டு , வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி என்பவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது .

இதனை எதிர்த்து , சென்னை உயர் நீதிமன்றத்தில் சுயேட்சை வேட்பாளரால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது . இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வு குலுக்கல் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவினை பார்வையிட்டுவிட்டு , முடிவு மாற்றி அறிவிக்கப்பட்டிருப்பது நிருபணமாகியுள்ளதாக தெரிவித்ததுடன் , தொடர்புடைய தேர்தல் அதிகாரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டது . இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் முன்பு நேரில் ஆஜரான தேர்தல் அதிகாரி , தி.மு.க. வேட்பாளர் தரப்பில் கொடுக்கப்பட்ட அரசியல் ரீதியிலான அழுத்தம் காரணமாகவே முடிவை மாற்றி அறிவித்ததாக கூறியிருக்கிறார் . ஓர் அரசு அதிகாரியே தி.மு.க.வினரால் மிரட்டப்படுகிறார் என்றால் , சாதாரண வேட்பாளர்கள் எம்மாத்திரம் ! தி.மு.க.வினரின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது .

இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர் , தகுந்த ஆதாரத்துடன் , சாதுர்யமாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியதன் காரணமாக அவருக்கு நல்லத் தீர்ப்பு கிடைத்திருக்கிறது . இவரைப் போல் துணிச்சலாக நீதிமன்றத்தை அணுகாதவர்கள் , பண வசதியின்மை காரணமாக நீதிமன்றத்தை அணுகாதவர்கள் , தி.மு.க.வினரின் மிரட்டல்களுக்கு பயந்து நீதிமன்றத்தை அணுகாதவர்கள் , விவரமின்மை காரணமாக நீதிமன்றத்தை அணுகாதவர்கள் என பல் பேர் இருக்கிறார்கள் . இதேபோல வாக்குப் பதிவிலும் ஆங்காங்கே முறைகேடுகள் நடந்ததாக தகவல்கள் வந்துள்ளன . இந்த முறைகேடுகள் நடைபெறாமல் இருந்திருந்தால் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும் .

இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பண பலம் , படை பலம் , அதிகார பலம் வெற்றி பெற்று இருக்கிறது . ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு , பணநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது . இதற்கெல்லாம் மக்கள் தக்கப் பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் .”

Hits: 0

Leave a Reply

Your email address will not be published.