Fri. Mar 29th, 2024

திரு.கே.பாலகிருஷ்ணன் CPIM மாநில செயலாளர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக வலிமையான போராட்டங்கள் நடந்துவருகின்றன. இருப்பினும் மோடி அரசு தனியார்மய பாதையில் மூர்க்கத்தனமாக பயணிக்கிறது.

இதன் காரணமாக மாநிலங்களும் பாதிக்கப்படுகின்றன. அதனை சுட்டிக்காட்டி தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பேசியிருப்பது வரவேற்பிற்குரியதாகும்.

மத்திய அரசின் பொதுத் துறைகளுக்கு, மாநில அரசாங்கம் நிலம் உள்ளிட்ட வளங்களை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ வழங்குகிறது. மேலும், மக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தியும் தரப்படுகிறது. அந்த நிறுவனங்களை தனியாருக்கு அடிமாட்டு விலையில் தாரைவார்க்கிறார்கள்.

தனியார் முதலாளிகள் அவைகளை முழுமையாக பயன்படுத்தி வருவாயும், கொள்ளை லாபமும் ஈட்டுகிறார்கள். ஆனால் இதனால் மாநில அரசாங்கங்களுக்கு எந்த வருவாயும் கிடைப்பதில்லை என்பதுடன் மக்களுக்கு இழப்பும் ஏற்படுகிறது.

எனவே, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும்போது “மாநில அரசிற்கு நிலத்தின் சந்தை மதிப்பிலான விலையை கொடுத்து ஈடு செய்ய வேண்டும். அல்லது அந்த நிறுவனங்களில் நிலத்தின் மதிப்பிற்கு நிகரான பங்கினை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்” என நிதியமைச்சர் வலியுறுத்தியிருக்கிறார்.

பொதுச் சொத்துக்கள் வரன்முறையில்லாமல் தனியார்மயப்படுத்தப்படும் இந்த சூழலில் தமிழ்நாடு நிதியமைச்சர் முன்வைத்திருக்கும் இந்தக் கருத்து வரவேற்கத்தக்கது ஆகும்.

Visits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *